Friday, December 4, 2009

முதல் குருதி








ஆள் உறக்கத்தில் பயமுணர்ந்து
உதிரம் கண்ட இரவில் தொடங்கியது
எல்ல துயரங்களுக்கான சாத்தியங்களும்

பயிற்றிவிக்கப்படாத,
முன்னறிவிப்பில்லாத
முதல் மாத விலக்கு....
காயமேதுமற்று உடலில் கண்ட
முதல் குருதி....
குழந்தைமையை நொறுக்கி
சிறு பூச்சிகளென பறக்கவிட்டது

உடல் முழுக்கப் பரவிகிடந்த
அயர்ச்சியும்
குடைந்த கால்களின் தனி துயரும்
அடிவயிற்றின் பெரு அலறலும்
கன்றி பொய் வலி தந்த மார்பும்
சேர்ந்த மனச் சோர்வும்
பிரவாகமெடுத்த கோவமும்
பீரிட்ட உதிரமும்
தனி சிறையில்
ஒளியும் காற்றும்,துளி நீருமற்று
மூச்சு திணறும்
கொடு நிலைக்கு தள்ளின

புது துணியும் அலங்காரமும்
விருந்தோம்பலேன ஏதும்
முறிக்கவில்லை
உடலில் ஏறிகிடந்த
வலி எனும் நஞ்சை

வழிந்த கண்ணீரை துடைக்க
ஏதிலாமல்
கைகளை வயிற்றுக்கு முட்டுக் கொடுத்து
குப்புறக் கிடக்கையில்
பாட்டி சொல்கிறாள்..
இதக்கூட தாங்கலேனா
அப்புறம் என்ன பொம்பள ???



....................................................................................


1 comment: