Monday, May 31, 2010

தீராக் காதல்









என்னுடைய சிறு வயதிலிருந்து அப்பாவிடம் கிரேக்க கதைகள் கேட்டு என்னை இளவரசியாகவே பாவித்து வாழ்ந்து வளர்ந்ததுண்டு.. என்னுடைய உலகத்தில் வெள்ளை மலர்களே என்னுடையே தோழி... காடுகளும் மலைகளும் நீர் வீழ்ச்சிகளுமே என்னுடைய வசிப்பிடம்.. என்னுடைய அறையில் எந்த திரை நட்சத்திரங்களோ பொம்மைகளோ அலங்கரித்ததில்லை, முழுவதுமே வெள்ளை மலர்களுடன் கூடிய காடுகளில் இயற்கையுடன் விளையாடி அலைந்துகொண்டிருக்கும் சிறு பெண்ணே எண்ணின் உலகமாய் இருந்தது. என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்புவரை.. ...... கல்லூரி வாழ்க்கையில் அடிஎடுத்து வைத்த போது முதல்முறையாய் என்னுடைய பால்ய வயது தோழி பிரியா என்னிடம் ஒரு குறுநாவல் அறிமுகம் செய்து என்னை படிக்க வைத்தாள்.. நாவல் பெயர் இரும்புக் குதிரைகள் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடையது.. தமிழில் நான் படித்த முதல் நாவல் எனினும் எழுத்தாளரின் கதை அந்த அளவு என்னால் புரிந்து கொள்ள முடியாவிடிலும் அவருடைய குதிரை பற்றிய கவிதை என்னை மிகவும் ஈர்த்தது ... ......எழுத்தாளர் குதிரையின் குண நலன்களாக விவரித்திருந்த கவிதைகள் என்னை குதிரையின் மேல் தீரா காதலை வளர்த்தது.. அன்றிலிருந்து இன்று வரை தீரா காதல் குதிரைகளின் மேல்எனக்கு.. கற்பனை உலகின் இளவரசியான நான் என்னுடைய பயணத்தை அன்றிலிருந்து காடுகளில் குதிரைகளிலே பயணிக்க ஆரம்பித்தேன் இன்று வரை ... பாலகுமாரன் அவர்களின் குதிரை கவிதைகள் **இரும்பு குதிரைகள்** நாவலிலிருந்து உங்களின் பார்வைக்கும் இதோ..





குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டு கதறுவதில்லை
வழியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்குப் பணிந்து போகும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் முதலாம் பாடம்...


....................................................................................
குளம்படி ஓசை கவிதை
குதிரையின் கனைப்பு கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாடம்....

.....................................................................................



குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய் பறவை போல
இலக்குகள் குதிரைகள் இல்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கி கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கிலா மனிதர் பெரியோர்!!!
உள்ளவர் அடையமாட்டார்..
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் மூன்றாம் பாடம்..
.....................................................................................


நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்து பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போல

நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினை போக்கும் குதிரை
தொட்டதும் விழித்து கொள்ளும்
தொடுதலை புரிந்து கொள்ளும்

தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்

குதிரைகள் கண்கள் மூடி
விறைத்து நிற்கும் காட்சி

யோகத்தின் உச்சகட்டம்
நெற்றிக்குள் சந்திர பிம்பம்...
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் நான்காம் பாடம்..

.....................................................................................

சவுக்கடி பட்ட இடத்தை
நீவிட தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இது ஓர் சுகம் தான் என்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்.
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஐந்தாம் பாடம்..
.....................................................................................

நீர் குடிக்க குனியும் குதிரை
நிழல் தெரிய பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்..
சீர் குணம் அறியமாட்டார்
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல் கூடாதென்று


குழப்பத்தை தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வெய்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமே என்றெண்ணி

குளம்பது விளிம்பில் நிற்கும்.

குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குழம்பை பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்....
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஆறாம் பாடம்....

.....................................................................................
அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சு பூனைகள் கொண்டதிங்கே
கூறிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு

பச்சோந்தி நிறத்தை மாற்றும்

பல்லிவால் விசத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பின்றி பிறந்தது எனன ???

வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய் கொள்ள
விருப்பமுடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விசமும் இல்லை
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்...???

குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்..

.....................................................................................
உழைப்புக்கே குதிரை என்ற
பெரும்போக்கு ஒரு நாள் உடையும்
குரங்குகள் மனிதர் போல
வந்ததென்பது உண்மை என்றால்
முகம் மட்டும் மனிதர் கொண்டு

குதிரை வரும் மடி மீது வீணை போட்டு
மழைக்கான வேதம் பாடும்
இரு காலில் புவிஈர்ப்பை
ஏந்திய குதிரை புத்தி
உலகத்தின் மாயை மாற்றும்
சகலமும் கவிதையாகும்
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரை யாவர்

மறுபடி குதிரையாகி
மனிதரை காண வருவர்


.....................................................................................


இப்படி ஆக குதிரை கவிதை படித்து உருவான குதிரை காதல் இன்னும் பயணித்து கொண்டுதான் இருகின்றது என்னுள்... காலங்கள் மாறி நான் முதுமை அடைந்தாலும் குதிரை மீதான என்னின் பயணம் என்றும் தொடரும் காதலின் இளமை மாறாமல்....

1 comment:

  1. தனிப்பட்ட மனிதனின் எண்ணங்கள் அழகானவை என்பதை அழகாய் புரிய வைத்துள்ளீர்கள் தோழி..ஏழு வித பாடம் கொண்டு புரவியின் புனிதத்தை சொல்லிய விதம் கவிதை..படிப்பவர்க்கும் ஒரு வித தாக்கம் ஏற்படுகிறது இன்னும் குதிரைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு...இது போல் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் தோழி ..வாழ்த்துக்கள் பல பல ...

    (தங்களின் கவிதைகளையும் இங்கு பதிவு பண்ணலாமே..தாங்கள் புனைந்த கவிதைகள் நானும் பார்த்ததுண்டு )

    ReplyDelete